Jump to content

User:Zunoomy Zain

From Wikipedia, the free encyclopedia

ஸ்மார்ட் போன்

வாழ்வின் முதுகெலும்பாக மாறிவிட்ட கையடக்க தொலைபேசி இன்றி மனிதனால் ஒரு வினாடி கூட இருக்க முடியாதளவுக்கு தொலைபேசிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. யானை தேய்ந்து கட்டெறும்பான கதையை போல தொலைபேசிகளின் வடிவங்கள் நவீனத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. இத்தோரணையில் இன்றளவில் மிக மிக அதிகமாக உபயோகிக்கப்படும் 'ஸ்மார்ட் போன்' சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உருவெடுத்து விட்டது. இன்றைக்கு ஒரு இளைஞனின் கரங்களில் ஸ்மார்ட் போன் இல்லாவிடின் அவன் பழமைவாதியாக பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். எனினும் இது உண்மையல்ல என்பது வேறு விடயம்.

ஸ்மார்ட் போன் மூலம் இடம் விட்டு இடம் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும் அதிநவீன சாதனங்கள் கண்டறிப்பட்டுள்ள தருணத்தில் இரத்த உறவுகளுடன் இணைப்பை அவற்றினால் ஏற்படுத்த முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். ஆம், நிதர்சன வாழ்வை சற்று மீட்டிப் பார்ப்போம்.

காலை விழித்தெழுந்தது முதல் விழி மூடும் வரை எம் கரங்களோடு உறவாடிக் கொண்டிருப்பது, ஒரு சிறு சத்தத்திற்கு எம்மை அதன்பால் ஈர்த்துக் கொள்வது, எந்நேரமும் ஏதோ ஒரு வகையில் ஸ்கிறீனை பார்க்க வைப்பது போன்ற விடயங்களை செய்யக்கூடியது ஸ்மார்ட் போன் தான் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. இவ்வாறு நாள் முழுக்க இதிலேயே கழியும் போது இரத்த உறவுளுக்கு எங்கே இடம்?, உறவாட எங்கே நேரம்?, அறிமுகமில்லாத பலரோடு உறவாடும் நாம் முகத்திற்கு எதிரே உள்ள உறவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். நான்கு நண்பர்கள் கூடினாலும், விருந்துக்கு போய் உட்கார்ந்தாலும், குடும்பத்தோடு சுற்றுலா சென்றாலும் அங்கே நாமும் ஸ்மார்ட் போனும் தான் உற்ற நண்பர்களாய் ஸ்பரிஸ்கின்றோம். நண்பர்கள், உறவினர்கள் பற்றியெல்லாம் நினைப்பது கூட இல்லை. நவீன தொழிநுட்பம் மனிதர்களுக்கு இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த வழிவகுத்தாலும் இரத்த உறவுகளோடு துருவங்களாக செயற்பட அல்லவா வழிகோலுகின்றது.

ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பிலேயே இரக்க சுபாவம், அன்பு மனம் காணப்படுகின்றன. அதனை வெளிப்படுத்த சூழல் அமைகின்ற போதே அவை தானாக வெளிப்படும். அதற்கான சூழல் எம் மூதாதையர்களிடம் அதிகமாகவே காணப்பட்டன என்பதை வரலாறுகளில் காண முடிகின்றது. ஆனால் எமது தலைமுறை வாழத்தெரியாமல் நவீனத்தை தவறாக உபயோகித்து தனக்கு தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது.

தொலைத்தொடர்புகளை பேணுவதும், உலக விடயங்களை இலகுவாக அறிவது போன்ற உயரிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் இன்று அதன் நோக்கங்கள் சிதைக்கப்பட்டதாக பயன்படுத்தப்படுகின்றது. வரலாறு சுட்டிக்காட்டும் சாதனையாளர்கள், முன்மாதிரிகள் அனைவரும் ஸ்மார்ட் போன் எனும் கருப்பொருள் அற்ற காலத்தில் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. மாறாக இன்று ஸ்மார்ட் போன் வைத்திருந்தும் சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை அவர்களை விட குறைவு என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இந்தவகையில் சாதனையானது நாம் வைத்திருக்கும் பொருளில் அல்ல நமது உள்ளத்தில் உள்ளது என்பதை மனதில் ஆழப் பதிந்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் போன் மூலம் தான் எனக்கு நிம்மதி கிடைக்கிறது, அது இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது என சொல்லுபவர்களே! ஸ்மார்ட் போனை இமை காப்பது போல் காப்பவர்களே! ஒரு நாளைக்கு தரளவ 24 மணித்தியாலங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை ழகக செய்து வையுங்கள். உங்கள் சிம்களை சாதாரண போன் ஒன்றுக்கு மாற்றி விடுங்கள். அடுத்த நாள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களாலேயே மதிப்பிட்டுக் கொள்ள முடியும்.

உங்களால் ழகக பண்ணி வைக்க முடியாவிட்டால் நீங்கள் ஸ்மார்ட் போனுக்கு 'அடிமை' மனதில் சோர்வுகளோ, கவலைகளோ இருந்தால் 'துரதிஷ்டவாளி' மனதில் எவ்வித பரபரப்பும் இல்லாமல் இருந்தால் 'அதிஷ்டசாலி' இதில் நீங்கள் எந்த ரகம்? உங்களை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். மனதிற்கு சங்கடமான முடிவுகள் கிடைத்திருப்பின் மாற்றிக் கொள்ள தயாராகுங்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் ஸ்மார்ட் போன் பாவிப்பது தவறு என்றோ, பாவிப்பவர்கள் மோசமானவர்கள் என்றோ கூறப்படவில்லை. மாறாக ஸ்மார்ட் போன் பாவனை மூலம் எமது எத்தனையோ சந்தோஷங்களை நாமறியாமல் தொலைத்து இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டவே யதார்த்தத்துடன் இக்கட்டுரை வரையப்பட்டது. ஸ்மார்ட் போன் பாவிப்பவர்களின் மனம் புண்படும் படியாக எழுதப்பட்டு இருந்தால் மன்னிக்கவும். மாற்றம் எம்மைத் தேடி வராது நாமே அதை தேடிப்போக வேண்டும். ஆகவே, மாற்றத்தை நம்மில் தேடுவோம். வாழ்வை அனுபவிப்போம்.