User:Usooly
20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளவையும் நீக்கப்பட்டுள்ளவையும்
20 இல் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் என்ன;
1. அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை. 2. பிரதமரை நியமிக்கலாம், நீக்கலாம் 3. பிரதமரின் ஆலோசனையின்றி அமைச்சர்களை நியமிக்கலாம் 4. உயர் பதவிகளுக்கான நியமனங்களை செய்ய முடியும். 5. அமைச்சரவை வரையரை நீக்கம். 6. ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்கலாம். 7. ஒருவருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கலாம். 8. ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது. 9. இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தலில் போட்டியிடலாம். 10. 30 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் அரசாங்கத்தினால்வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரங்கள் மீண்டும் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாமல் செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ஒரு அமைச்சுப் பதவியைக் கூட வகிக்க முடியாதவராக ஜனாதிபதி காணப்பட்டார். இந்நிலையிலேயே தற்போது மீண்டும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எவ்வாறான விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன அல்லது எவ்வாறான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன என்பதனை பார்க்கலாம்.
19 இல் எஞ்சியவை என்ன? இங்கு முதலில் 19 ஆவது திருத்தச் சட்த்தில் என்ன விடயங்கள் எஞ்சியுள்ளன என்பதனை பார்க்கவேண்டும். அதாவது நான்கு விடயங்களை தவிர ஏனைய அனைத்து ஏற்பாடுகளும் மாற்றப்பட்டுள்ளன. அதாவது 19 ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் தகவல் அறியும் உரிமை ஏற்பாடு 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்படவில்லை. அது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனால் தகவல் அறியும் சட்டம் வழமை போன்று இயங்கும். அதேபோன்று ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது 19 இன் ஊடாக கொண்டுவரப்பட்டது. அந்த ஏற்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. மேலும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் என்பதும்19 காணப்பட்டது. அந்த பிரிவும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். எனவே ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பதில் மாற்றம் இல்லை. அதுமட்டுமன்றி ஜனாதிபதியாக ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற ஏற்பாடும் தொடர்ந்து அமுலில் இருக்கும் வகையிலேயே 20 ஆவது திருத்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றப்பட்டுள்ள முக்கிய விடயங்களை பார்க்கலாம்.
உயர் பதவிகள் அனைத்து உயர் பதவிகளுக்குமான நியமனங்களை ஜனாதிபதி செய்வதற்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அமைச்சர்கள் பிரதி இராஜாங்க அமைச்சர்கள் முப்படை தளபதிகள் சட்ட மா அதிபர் பிரதம நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் என முக்கிய உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி செய்யலாம். 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி முழுமையாக இந்த அதிகாரங்கள் இருக்கவில்லை. தற்போது 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மீண்டும் அந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
பாராளுமன்ற பேரவை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டு அந்த அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்றப் பேரவை 20 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற பேரவையின் உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரின் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஆகியோர் நியமிக்கப்படுவர். முன்னைய அரசியலமைப்பு பேரவையே உயர் பதவிகளுக்கான நியமனங்களை செய்தது. ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதியே இந்த நியமனங்களை செய்வார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும். தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, நீதிசேவை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்களே நியமிக்கப்படவுள்ளன. 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட கணக்காய்வு ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். உதாரணமாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியினால் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அந்த மூன்று உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளர் நாயகத்தை நியமிப்பார்கள். அத்துடன் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அதன் தலைவராக பிரதம நீதியரசர் இருப்பார்.
பிரதமர் அமைச்சர்கள்
இந்த விடயத்தில் முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி பிரதமரை நியமிக்கலாம். ஆனால் நீக்க முடியாது. மேலும் பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களை நியமிக்கலாம். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இந்த விடயங்கள் மாற்றப்படுகின்றன. அதாவது பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். அத்துடன் பிரதமரை நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கும். மேலும் அமைச்சர்கள் நியமனம், அமைச்சர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. தேவை எனினும் இந்த விடயத்தில் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி பெறலாம். ஆனால் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் நியமனங்களை செய்வதற்கான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு செல்கின்றது.
அமைச்சர்கள் 30 மற்றும் இராஜாங்க பிரதியமைச்சர்கள் 40 என்ற வரையரைகள் 19 இல் காணப்பட்டன. ஆனால் 20 இல் அவை நீக்கப்பட்டுள்ளன. எத்தனை அமைச்சுக்கள் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்கலாம். மேலும் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும். அமைச்சரவையின் தலைவராகவும் அதேநேரம் உறுப்பினராகவும் செயற்படுவார். அதாவது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னர் ஜனாதிபதிகள் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. ஆனால் 20 இன் ஊடாக இந்த தடை நீக்கப்படுகின்றது. ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள போதிலும் கூட ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்.
பாராளுமன்ற கலைப்பு 2015 ஆம் ஆண்டு 19 ஆவது திருத்தத்தின் ஊடாக செய்ய முக்கியமான மாற்றமாக பாராளுமன்ற கலைப்பு விடயம் காணப்பட்டது. அதாவது புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம். அதற்கு முன்னர் கலைப்பதாயின் 150 எம்.பி. க்கள் கை்சாத்திடவேண்டும். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் உடாக ஜனாதிபதி ஒரு வருடகாலத்தில் பாராளுமன்றத்தை கலைக்கக்கூடிய வகையில் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்துடன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் மீண்டும் கூட்டுதல் ஆகிய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றன. இது முக்கிய விடயமாகும்.
ஜனாதிபதி முதல் பாராளுமன்ற அமர்வில் கொள்கை பிரகடன உரையை ஆற்றுவார். அந்த கொள்கை பிரகடன உரை நிராகரிக்கப்பட்டாலும் கூட பாராளுமன்றத்தை கலைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒதுக்கீட்டு சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும்.
வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு விடயத்திற்காகவும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்வதற்கு முடியுமாக காணப்பட்டது. எனினும் 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற விடயம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீதித்துறையைப் பொறுத்தவரையில் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் அதன் நீதியரசர்கள், சட்டமா அதிபர், உள்ளிட்டோரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு தூதுவர்கள் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இராஜதந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் முப்படை தளபதிகள், உள்ளிட்ட நியமனங்களை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. யுத்தம் மற்றும் சமானதானத்தை பிரகடனம் செய்யும் உரிமையும் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது.
இரட்டை பிரஜா உரிமை
இது இவ்வாறிருக்க இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற 19 ஆவது திருத்த சட்டத்தின் 13 ஆவது பிரிவும் 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நீக்கப்படுகிறது. அதன்படி இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த விடயமே அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவருகின்றது. முக்கியமாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்காக இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற தடை நீக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. ஆளும் கட்சிக்குள்ளும் சில மாற்று கருத்துக்கள் இந்த விடயத்தில் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் 19 இல் இருந்த அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்ற ஆணையாளர் உள்ளிட்ட நியமனங்களை செய்யும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல முக்கிய விடயங்கள் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் யாராவது இதனை உயர்நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தினால் அதனை ஆராய்ந்து உயர்நீதின்றம் தனது அபிப்பிராயத்தை பாராளுமன்றத்துக்கு அனுப்பும். அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.
1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை திருத்தம் நிறைவேற்றப்படின் அது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமாக அமையும். 20 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் நிறைவேற்றலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.