User:Razimbsh
நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார். நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது' என அனஸ்(ரலி) அறிவித்தார். 'அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்' என இக்ரிமா கூறினார். ஸஹீஹ் புகாரி : 371. அத்தியாயம் : 8. தொழுகை