User:Chantamohank
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் சர்வதிகாரிகளை உருவாக்கவே பயன்பட்டு வந்திருப்பதை இப்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி உருவாவதற்கான அரசியல் யாப்பை எழுதி அரங்கேற்றிய கட்சியைச் சேர்ந்தவர்களே இன்று பொதுக்கூட்டு அமைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எனும் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் மூலம் நடைமுறைப்படுத்தினார்.
1972 மே 22 இல் இந்த யாப்பு அறிமுகமானது. 1970 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை ஆசனங்களால் ஏற்பட்ட பெருமிதத்தோடு அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தை அரசியல் நிர்ணயசபையாக மாற்றித் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை நிராகரித்து அரசியல் யாப்பை எழுதி நடைமுறைப்படுத்தினார்.
இத்தகைய ஒரு யாப்பை எழுதுவதற்குத் தலைமை தாங்கியவர் கொல்வின். ஆர்.டி.சில்வா. இவரை ஒரு சமதர்மவாதி என்று எல்லோரும் நம்பியிருந்தனர். "ஒரு மொழி இரு நாடு: இரு மொழி ஒரு நாடு' என்பது இவரால் உதிர்க்கப்பட்ட பிரபல வாசகம். சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் அரச மொழி என்றால் நாடு இரண்டாக உடைந்துவிடும்.
சிங்களமும் தமிழும் அரச மொழிகளானால் நாடு ஒன்றாகவே அமையும் என்பதே இதன் சாரம். ஆனால், இதே மகான் தனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது சிங்களத்துக்கு மாத்திரமல்ல, பௌத்தத்துக்கும் முதலிடம் கொடுத்து இனவாத அரசியல் யாப்பை எழுதி நாட்டுக்கு அளித்திருந்தார்.
இந்த யாப்பின் மூலம் "சிலோன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட நாடு "ஸ்ரீலங்கா' ஆனது. பிரிட்டிஷ் அரசாண்மைத் தொடர்புகள் முற்றுமுழுதாக அறுக்கப்பட்டன. பிரிட்டிஷ் இராணியால் நியமிக்கப்பட்டிருந்த மகாதேசாதிபதி என்கின்ற இலங்கையை மேலாண்மை செய்த பதவி ஜனாதிபதி பதவியாக மாற்றம் பெற்றது.
ஜனாதிபதியை இலங்கையின் பிரதமரே நியமித்தார். இதன்படி பிரிட்டிஷ் இலங்கையின் கடைசி மகாதேசாதிபதியாகக் கடமை புரிந்த வில்லியம் கொபல்லாவ என்பவரே இலங்கைக்குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் நியமிக்கப்பட்டார்.
ஆனால் 1977 இல் இடம்பெற்ற தேர்தலின்போது ஆட்சி கைமாறியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1970 தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் தமது கட்சியை விட சுமார் 53 ஆயிரம் வாக்குகள் குறைவாக எடுத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 91 ஆசனங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது கட்சி 17 ஆசனங்களையே கொண்டிருந்ததை ஜே.ஆர். ஜீரணிக்க முடியாதவராக இருந்தார்.
தனக்குக் கிடைத்த அதீத பெரும்பான்மையை சாதகமாக்கிக் கொண்டு 1978 இல் இலங்கைக்குடியரசின் இரண்டாவது அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தினார். இதன் போதுகூட தமிழர்களின் அபிலாஷைகள் புறந்தள்ளப்பட்டன. இந்த இரண்டாவது குடியரசு யாப்பின் மூலம் உருவான மிகப்பெரிய கேடுதான் இன்றைய நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை.
முதலாவது நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரது ஆட்சி பதினொரு வருடங்கள் நீடித்தது. அதிகாரங்கள் குவிந்துள்ள பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கு அரசியல் யாப்பு இடங்கொடாததால் பதவியைப் பிரிய மனமின்றி 1989 இல் விலகினார். அதன் பிறகு 1993 வரை ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிவகித்தார்.
நான்கு வருட ஆட்சியின்போது இவர் கொல்லப்பட்டதால் மீதியாக இருந்த இரண்டுவருட ஆட்சி காலத்துக்கு டிங்கிரி பண்டா விஜேதுங்க நாடாளுமன்றத்தால் தெரிவானார். இவரது பதவிக்காலம் 1994 இல் முடிவடைந்ததோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருடகால ஆட்சிக் காலமும் மறைந்தது.
பிரேமதாஸ கொலையுண்டிராவிட்டால் அவரும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தை நீடித்திருக்கக்கூடும். முதலாவது ஜனாதிபதியான வில்லியம் கொபல்லாவ அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் தேசிய அரசு பேரவையின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்.
அவருக்குச் சில சம்பிரதாயக் கடமைகள் இருந்தபோதிலும் பிரதமரின் ஆலோசனைப்படி நடக்கவேண்டிய கடப்பாடும் இருந்தது. மகாதேசாதிபதி பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டது போல இலங்கை ஜனாதிபதி பிரதமர் தலைமையினாலான நிர்வாகத்துக்குக் கட்டுப்படவேண்டியவரானார். ஆனால் குடியரசின் இரண்டாவது அரசியல் யாப்பின்மூலம் அறிமுகமான ஜனாதிபதி அவ்வாறானவர் அல்லர். அவருக்குச் சகல அதிகாரங்களும் அரசியல் யாப்பின்மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.
தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதி ஒரு மன்னன் போலவே நடந்துகொள்ள வகை செய்யப்பட்டிருக்கிறது. பிரதமமந்திரி தொடக்கம் பிரதி அமைச்சர் வரை ஜனாதிபதியின் விரல் அசைவுக்கு நடந்தாலன்றி அவர்களால் அரசியலில் பிளைத்துக்கொள்ள முடியாது என்ற அளவுக்கு ஜனாதிபதி அதிகாரங் கொண்டவராகின்றார்.
இத்தகைய அதிகாரங்கள் காரணமாகத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது பதவியின் பெருமைப்பற்றி கூறும்போது ஆணைப் பெண்ணாக்குவதும் பெண்ணை ஆணாக்குவதும் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் தன்னால் செய்யமுடியுமெனத் தெரிவித்தார். இதன் காரணமாக ஜனாதிபதியின் விருப்பமே அரசின் விருப்பமானது: ஜனாதிபதியின் செயற்பாடே அரசின் செயற்பாடானது: ஜனாதிபதியின் சிந்தனையே அரசின் சிந்தனையானது.
நிறைவேற்று ஜனாதிபதி பதவி தொடங்கிய காலத்திலேயே தமிழர்களின் போராட்டமும் முனைப்புப் பெற்றிருந்ததால் ஜனாதிபதியின் அதிகாரத்தின் அத்தனை பலமும் தமிழ் மக்கள்மேல் தான் பாய்ந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் எனப் பலவகையான சட்டங்களின் கொடூரங்களும் தமிழர்கள்மேல் பாய ஜனாதிபதியின் அதிகாரங்கள் பெருமளவில் உதவியதால் தென்னிலங்கை மக்களும் சந்தோசமாகவே ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
ஜனாதிபதியின் அதிகார வளங்காரணமாகப் பதினேழு வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி கோலோச்சியது. ஜே.ஆர். காலத்திலும் பிரேமதாஸ காலத்திலும் அவர்கள் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லார் போல் தோற்றம் பெற்றிருந்தனர். அவர்கள் சொல்வதே வேதம்: அவர்கள் விரலசைவே அரசியல் என்றும் காணப்பட்டது. ஜே.ஆர். யுகம் என்று ஒருபுதிய காலத்தைத் தோற்றுவித்து புகழ்பாடும் அளவுக்குப் பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் தாழ்ந்துபோய்க் கிடந்தார்கள்.
பிரேமதாஸவின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை விஜேதுங்காவாலோ வேறு எவராலோ நிரப்பமுடியாத இக்கட்டான சூழல் ஆட்சி மாற்றத்துக்கான தேவையை உணர்த்தியது. இரண்டு பிரதமர்களின் புதல்வி என்ற கௌரவம், விஜேகுமாரதுங்க என்ற நல்லமனிதரின் மனைவி என்ற சிறப்பு, ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியின்போது துன்பங்களை அனுபவித்தவர் என்ற தகைமை, தந்தையையும் கணவரையும் வன்செயலில் பறிகொடுத்தவர் என்ற பரிதாபம் ஆகியன சந்திரிகாவை 1994 இல் ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தி வைத்ததால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்ததோடு இன்றுவரை தலையெடுக்க முடியாமலும் திண்டாடுகிறது.
சந்திரிகா, ஜனாதிபதி தேர்தலின்போது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று பிரசாரம் செய்தார். ஆனால் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்துவிட்டு பதவியை விட்டு மனமில்லாமலேயே பிரிந்தார்.
அதன்பிறகு 2005 இல் ஜனாதிபதி மஹிந்த தெரிவானார். இப்போது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இருக்கும் அவர் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியுள்ளதால் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகித்து ஆயுட்கால மன்னனாக இருக்க ஆசைப்படுகிறார்.எந்தக்கட்சி சார்ந்திருந்தாலும் எல்லா ஜனாதிபதிகளிடமும் ஒரு பொதுத்தன்மை காணப்படுகிறது.
தன்னை மன்னராகப் பாவித்துக் கொள்வது, தமது உறவினர்களுக்குப் பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்த முக்கிய துறைகளைக் கையளிப்பது, அவர்களைச் சிற்றரசர்கள் போல் உலாவர அனுமதிப்பது, தனது குடும்பத்தைச் சாராத அனைத்து அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் தமது குடும்பச் சேவகர்களாகப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விலைகொடுத்து வாங்குவது,எதிர்க்கட்சிகள் தலையெடுக்கமுடியாமல் அடாவடித்தனங்கள் செய்து தடுப்பது ஆகிய குணாம்சங்களுக்கு எந்த ஜனாதிபதியும் விதிவிலக்காக இருக்கவில்லை. இனிமேல் வரப்போகின்றவர்களும் இருக்கப்போவதில்லை.
சந்திரிகா காலத்தில் இந்த வரன்முறைகளை மீறி ரணில் தலைமையிலான அரசு அமைந்தபோது சில அமைச்சின் அதிகாரங்களைச் சந்திரிகா தம்வசம் எடுத்துக்கொண்டதும், ரணிலின் ஆட்சி நியாயமற்றுக் கலைக்கப்பட்டதும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்துக்கு ஒரு சான்று.
இப்போதுகூட திவிநெகும சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் தடையாக இருப்பதன் காரணமாக நீதித்துறை அவமதிப்புக்குள்ளாகி நிற்பதும். மேர்வின் சில்வா, ரிஷாத்
பதியுதீன் போன்றவர்களுக்கு ராஜரீக அந்தஸ்து நிலைத்திருப்பதும் ஜனாதிபதி அதிகாரங்களின் சிறப்பம்சமே.
இத்தகைய அதிகாரம்மிகுந்த ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு சந்திரிகாவால் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புச் சட்டமூலத்தில் காணப்பட்டிருந்தது. ஆனால், அந்த யாப்பில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு காணப்படலாம் என்று அஞ்சிய ரணில் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அரசமைப்பு முன்மொழிவுப் பத்திரத்தை கிழித்தெறிந்தும் தீயிட்டும் எதிர்ப்புக் காட்டி அந்த யாப்பை நிறைவேற விடாமல் குழப்பியிருந்தார்.
ஒருவேளை அன்று அந்த யாப்பு நிறைவேற அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதனால் ரணில் பிரதமராக வருவதற்குக் கூட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு இடங்கொடாத பலனைத்தான் இன்று ரணில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தடி கொடுத்து அடி வாங்கும் தென்னிலங்கை மக்களை ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்ற விஷச் சுழியிலிருந்து யார் காப்பாற்றுவது என்பதுதான் இன்றைய கேள்வி.