Jump to content

User:Bremla Begin

From Wikipedia, the free encyclopedia

தனி ஒருவன்:Film Review[1]

     இதை எழுதுவதற்குகூட சிறிதளவு அஞ்சவேண்டிய நிலைமை உள்ளது , ஏனெனில் ஒரு திரைப்படத்தைக் கொண்டாடுவது என்பது நமது சமூகத்தை பொறுத்தளவில், ஒன்று கடைக்கோடி ரசிகனின் பெரும்விருப்பத்தை பெற வேண்டும் , பெரும்பாலும் இத்தகைய படங்கள் தமிழ் திரைப்பட உலகின் விதிகள் மீறாத திரைப்படங்களாக மட்டுமே இருக்கும். இது பெருவாரியான உற்சாகத்தோடு கொண்டாடப்படும். இதன் மறுபக்கமாக பெரும்பாலும் விமர்சகர் வட்டத்தினரால்க் கொண்டாடப்பட்டு உலக திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டு , மக்களின் மத்தியில் பெரிதும் ஒதுக்கப்பட்டு, விருது திரைப்படம் எனச்சொல்லப்படுபவையும் உண்டு. இதனாலேயே பெரும்பாலும் தமிழ்த்திரைப்பட உலகம் எது சிறந்தப்படம் , ஒரு திரைப்படத்தினை எப்படி அணுகுவது , கலைப்படங்கள் என்றாலே வெறும் அழுகைக் காட்சிகளால் நிரம்பியது என்று நம்பவைக்கும் அளவிற்கு இங்கு திரைப்படம் குறித்த பார்வை உண்டு. இவையனைத்தையும் சொல்வதற்கு ஒரு காரணம் , ஒரு திரைப்படத்தினை அதன் உட்பொருளுடன் எவ்வாறு அணுகுவது என்கிற கருத்துக்களோ , அல்லது ஊடகம் குறித்தான தெளிவான பார்வையோ இல்லாத , கலைரசனைக் குறித்தான தேடலோ இல்லாத ஒரு சமுதாயத்தில் ஒரு திரைப்படத்தினை எவ்வாறு வரையறுப்பது என்பதுவே மிகப்பெரும் போராட்டமாகும்.
    தனி ஒருவன் , பெருவாரியான மக்களால் கொண்டாடப்பட்டது மட்டுமில்லாமல் , சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, அதாவது திரைக்கதை , உருவாக்கம் சார்ந்த மிகச்சிறந்த திரைப்படமாக முன்னிறுத்தப்படுகிறது.  அதன் அளவில் மட்டுமே இதை சிறந்த திரைப்படமாக முன்னிறுத்துவது வழமையான ஒரு திரைப்படத்தினை கடந்துப்போவதற்கு ஒப்பாகும். இதை நான் முன்னிறுத்துவதற்கு காரணம் , வணிகத்திரைப்படங்களை பொறுத்தளவில் விமர்சகர்கள் , இதை எதற்கு கொண்டாடவேண்டும் , அல்லது இதன் வாயிலாக மக்கள் எதைக் கற்றுக் கொள்ளப்போகிறார்கள் எனவும் , வெறும் தனி மனித சாகசத்தினைக் கொண்ட படைப்பிற்கு எதற்கு விமர்சனபோக்கில் அதை அணுகவேண்டும் என ஒதுக்க , வணிகத்திரைப்பட பிரியர்களோ , இதை வெறும் சிறந்த படம் என்னும் குடுவைக்குள் மட்டும் அடைக்க முயல்கிறார்கள். இதை தவிர்த்து இந்த திரைப்படம் வெளிப்படுத்தும் சில விடயங்கள் மிக முக்கியமானவை. 
     முதலாவது திரைப்படத்தின் மையம் என்பது ஒரு செய்தித்தாளின் தினசரி நிகழ்வுகளை முன்வைத்தே அதன் அடிப்படையான காட்சிகளாக கட்டமைக்கப்படுகிறது. அதாவது தினசரி நிகழும் செய்திகளின் அடிப்படையாக வைத்து பல பெரிய விஷயங்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. அதாவது நாம் உண்மை எனக்கருதிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு பின்னால் பல விஷயங்கள் உள்ளன , இதைக் குறீத்து எப்பொழுதுதாவது யாராவது பேசியிருக்கிறமோ? நம்மைப் பொறுத்தளவில் ஊடகம் முன்வைக்கும் செய்தியே உண்மை , அதை நம்பியே பல விஷயங்களை நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு நாட்டிற்கு நமது அமைச்சர்கள் செல்வதும் , அல்லது வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் வெளிநாட்டு அதிகாரிகளோ , அல்லது பன்னாட்டு முதலாளிகளோ பல்வேறு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் , அதனால் நாட்டிற்கு மிகப்பெரும் வருமானம் குவிகிறது எனவும் நமது ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் நாளடைவில் அதுக்குறித்த சிறிய ஆழமான விவாதங்களோ ,அல்லது ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு எதற்கு நமது வளங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற விவாதங்களை முன்வைப்பதே இல்லை. ஒரு செய்திக்கு பின் நிகழும் மிகப்பெரும் உண்மைகளோ , இல்லை தவறுகளோ , இங்கு பெருமளவில் விவாதிகப்படுவதில்லை. இதையே ஒரு தவறு என தனி ஒருவன் முன்வைக்கிறது. ஒரு தற்கொலைக்கு , கொலைக்கு , முறையற்ற உறவுகள் குறித்த கொலைகள் , மறைக்கப்படும் சாதியம் சார்ந்த கௌரவக் கொலைகள் , என ஒரு செய்தித்தாளில் வெளிவரும் பல விஷயங்களுக்கு பின்னாலும் பல விஷயங்கள் இருக்கின்றன.
  தனி ஒருவனின் அடுத்தக்கட்டம் பன்னாட்டு கம்பெனிகள் எந்தளவிற்கு தங்களுடை கரங்களை நீட்டித்துள்ளது என்பதனை மிகத்தெளிவாக விளக்குவதுதான். கனிம வளத்திற்கான தனியாக ஆட்கள் , மருத்துவத்துறைக்கு தனியான ஆட்கள் , அவர்களை எதிர்ப்பவர்களை கொலை செய்வதற்கு என தனி ஆட்கள் என நிழலுகத்தின் விடயங்களை விளக்குவது , ஒரு செயின் அறுப்புக்கு பிறகு இருக்கும் மிகப்பெரும் படுகொலைகள் என ஒவ்வொரு விடயமும் மிக முக்கியமானவை.. குற்றவாளிகளுக்கு உண்மையாகவே தண்டனைக் கிடைக்கிறதா? என பல பல கேள்வி்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைக்குறித்து யாராவது  இணையத்தில் எழுதியிருக்கிறார்களா , எனத்தேடினால் மிகச்சொற்பமான சிலரே இதை அரசியல்க்கோணத்தில் வைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் திரைப்பட உலகில் சிறந்த படங்கள் வருவதில்லை எனக் குறைபட்டுக் கொள்கிறவர்கள்க்கூட தனி ஒருவனை வெறும் வணிகத்திரைப்படமாக மட்டுமே நினைக்கிறார்கள் , ஒரு திரைப்படத்தினை எப்படி அணுகுவது என்கிற ஒரு பார்வையோ அல்லது அதை ஏன் இவ்வாறு அணுக வேண்டும் என்கிற நோக்கமோ இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே படம் குறித்த விவாதங்கள் என்பவை வெறும் சிறந்த திரைப்படங்கள் , சிறந்தக் காட்சிகள் , சிறந்த இசை என்கிற சிறந்தவை என்பதோடு நின்றுவிடுகின்றன , மாறாக காட்சிகள் அடிப்படையிலான பார்வை , ஏன் இவை படத்தின் அடிப்படைக் கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன , ஏன் இவை இந்த திரைப்படத்தில் விவாதிக்கப்படுகின்றன? இதை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது குறித்து இங்கு ஒரு மாற்றம் ஏற்படாமல் உள்ளது. பொதுவாக இத்தகைய பார்வைகள் கலைப்படங்களில் மட்டும் நம்மவர்களால் விவாதிக்கப்படுகிறது, அதைத் தவிர்த்து திரைப்படங்கள் என்கிற ஒரு பொதுவான கோணத்திலிருந்து இதை அணுகுவதில்லை. அதாவது நல்ல திரைப்படங்கள் , கெட்ட திரைப்படங்கள் என்பவையே திரைப்படங்களின் பிரிவுகளாக இருக்க முடியும். கலைப்படங்கள் , மாற்று திரைப்படங்கள் , வணிகத்திரைப்படங்கள் என்பவை ஒரு போலியான கட்டமைப்பாகவே உணர்கிறேன். ஒரு சிறந்த திரைப்படம் தன்னளவில் முழுமையான அனுபவத்தினைக் கொடுப்பதோடு சில கேள்விகளையேனும் உருவாக்க வேண்டும் , அதனை தனி ஒருவன் செய்வதாகவே சொல்ல முடியும். 
 தனி ஒருவனின் மிகமுக்கிய விடயமாக பலரால் விவாதிக்கப்பட்டது , அதன் பின்பகுதிக் காட்சிகள் , இவை பெரும்பாலும் என்னும் கொரியப் படத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டவை என கடுமையான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதாவது அதனையொட்டியே பல காட்சிகள் இருந்தன எனவும் , இயக்குனரை  இணைய விமர்சகர்கள் மிககடுமையாக விவாதித்தார்கள். ஆனால் இரண்டு வெவ்வேறு வகையான திரைப்படங்களில் ஒரே மாதிரியான ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில் இரண்டுவிதமான காட்சியமைப்புகளில் ஒருமித்த வடிவமாக இருப்பது அந்த ட்ராக்கிங் டிவைஸ் எனப்படும் ஒரு கருவிக் குறித்த ஒரு காட்சி மட்டுமே , மற்றவகையில் இரண்டும் வெவ்வேறு விதமான தளங்களில் நிகழும் காட்சிகள் ஆகும் , அதாவது ஒரு திரைப்படத்தினை பார்த்து காட்சிக்கு காட்சி அப்படியே எடுப்பதற்கும், ஒரு யோசனையை முன்வைத்து அதனை வேறுக் காட்சிகளாக பயன்படுத்துவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இதில் தனி ஒருவன் இரண்டாவது வகையே ஆகும். அதனால் இதை அறிவுத்திருட்டு எனச்சொல்லுவது கேலியானதே ஆகும். 
   தனி ஒருவனின் மிகப்பெரும் பலம் என்றால் அரவிந்த் சாமியை சொல்ல முடியும். ஏனெனில் ஒரு திரைப்படத்தின் எதிர்மறைக்கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியமானது , அதாவது ஒரு வில்லனின் முக்கியத்துவத்தினை பொறுத்தே கதாநாயகனுக்கு முக்கியத்துவம் அமைகிறது. ஜோக்கர் கதாபாத்திரம்  இல்லாவிடில் பேட்மேனுக்கு மதிப்பில்லை , ஆண்டனி இல்லாவிடில் பாட்ஷாவிற்கு மதிப்பில்லை,  அந்தவகையில் அரவிந்த சாமி மிக முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. அசால்ட்டாக ஒரு விஷயத்தை கையாள்வதாகட்டும் , ஒரு பிரச்சனை நிகழும்போது அதை எதிர்க் கொள்ளும்விதமாகட்டும் , அலட்சியமான புன்னைகை , பரபரப்பில்லாத கண்கள் , மிகச்சர்வ சாதரணமான கொலைகள் , தன் தந்தை இறந்த பிறகும் அதைக்குறித்து கவலையில்லாமல் தன் வேலையில் ஈடுபடுவது, மக்கள் கூட்டத்தினை பார்த்து நடுவிரலைக் காட்டுவது , என ஒவ்வொருக் காட்சியிலும் வில்லத்தனமாக அசத்துகிறார். மித்ரனைவிட அபிமன்யு சித்தார்த் மட்டுமே மனதில் நிற்கிறார் என்பதே இந்த படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும். மற்றக் கதாபாத்திரங்களும் மனதிற்கு மிக நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் படம் எந்த இடத்திலும் சிதையாமல் உள்ளது , அதாவது இரண்டாம் பகுதியில் தேவையில்லாமல் வருகிற ஒரு பாடலைத் தவிர. 
 இதில் மிக முக்கியமாக கொண்டாடப்பட வேண்டியவர்கள் , தனி ஒருவனின் திரைக்கதையினை எழுதிய இயக்குனர் ராஜா மற்றும் எழுத்தாளர்கள் சுபா அவர்களும்தான். சமீபத்திய பல வெற்றிக்கூட்டணிகளில் சுபா அவர்களின் எழுத்து பங்களிப்பு மிக முக்கியமானது. ஒருவிதத்தில் இது ஒரு மிக முக்கியமான விடயமாகும். எழுத்தாளர்களின் பங்கு ஒரு திரைப்படத்திற்கு தேவை என்பதை இது உணர்த்தியுள்ளது. தமிழ்ச்சூழலினை பொறுத்தளவில் திரைக்கதை எழுத்தாளர்கள் , கதையாசிரியர்கள் , குறித்த தேவை என்பது எந்தளவிற்கு இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 
  நமது படைப்பின் அடியாழமாக எப்பொழுதும் ஒரு விடயம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கும் , அதாவது ஒவ்வொரு படைப்புலகிற்கும் அது நிகழும் இடத்தின் தன்மைகளுக்கும் இறுக்கமான தொடர்பிருக்கும். அதாவது ஒவ்வொரு படைப்பும் அதன் சமூகத்தினை எதிரொலித்தோ அல்லது எதிரொலிக்கப்பட்டோ உருவாகும். தனி ஒருவன் சமூகத்தின் மிக முக்கியமான சமூக பிரச்சனையை எதிரொலித்திருக்கும் அதேவேளையில் தமிழ் படைப்புலகிற்கான இயல்பான சில விடயங்களை வழக்கம்போலவே தூக்கிபிடித்திருப்பது வருத்ததிற்குரியது. உதாரணத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தின் தோற்றம் , அவனது வளர்ச்சி , என்பன அனைத்துமே ஒடுக்கப்பட்டவனின் தளத்திலிருந்து காண்பிக்க வேண்டிய அவசியமில்லாதபோதும் அங்கிருந்து துவங்க வேண்டியதன் கட்டாயமென்ன? இதில் இரண்டுவிதமான பொதுபிம்பங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்படுகின்றன. ஒன்று தொடர்ந்து பணத்தின் மீது ஆசைக் கொண்டிருப்பவன் விளிம்பு நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்டவன் மட்டுமே என்பது, இன்னொன்று மற்றவர்கள் தன்னளவில் மிக நேர்மையாக இருக்கிறார்கள் என்பதாகவும் கட்டமைக்கப்படுகிறது. இது ஒரு போலித்தனமான பிம்பம் எனலாம் , பலரின் மனதில் இருக்கும் ஒரு விடயம் பணம் இல்லாதவனே அதை நோக்கி வெறித்தனமாக ஓடுவான் என்பதாக இருக்கும். ஆனால் இன்றைய நவீன வாழ்வியல் சூழலில் பணம் என்பது பலரையும் வெறித்தனமான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளியிருக்கிறது எனலாம். கதாநாயகனின் அடையாளத்தையும், அவனது நண்பர்களின் வாழ்வியல் அடையாளங்களை சாதிய அடிப்படையில் மேல்தட்டிலும் , எதிர்மறைக் கதாபாத்திரத்தினை ஒடுக்கப்பட்டவன் இடத்திலும் வைக்கவேண்டியதன் அவசியம் என்ன வந்தது? ராமாயணம் , மகாபாரதக் காலத்திலிருந்து இதேதான் தொடர வேண்டுமா? 
   இதன் இன்னொரு பரிமாணம் என்பது ஒரு சமுதாயத்தின் கடைநிலைகளிலிருந்து தன் வாழ்வின் உச்சநிலையை அடையும் தனி நபர்கள் தங்களது சுற்றத்தாரை மறப்பதும் , தங்களது வாழ்வியல் அடையாளங்களை மறைத்துக் கொண்டு உயர் சமுதாயத்தின் அடையாளமாக தங்களை நிறுவிக் கொள்வதும் இயல்பாக நடைபெறுகிற ஒன்று. இதன் ஒரு சாயலே பழனி என்கிற சிறுவன் சித்தார்த் அபிமன்யூ என மாறுவது. 
  படம் நெடுகிலும் ஆங்காங்கே தலைகாட்டும் சாதிய நெடிகளை தவிர்க்க முடிவதில்லை , அவை படத்தின் கதைக் கட்டமைப்பில் நல்லதொருவிடயங்களை பகிர்வதற்கோ அல்லது சரியான புரிதலை ஏற்படுத்தவோ நிகழ்வதில்லை. மாறாக இது உயர் வர்க்கத்திருக்கான ஒரு படம் என்கிற கட்டமைப்பை தொடரவே விரும்புகிறது என்பது ஒரு நல்ல படத்தில் நீண்டுக்கிடக்கும் தீயதொரு மாற்றம் எனலாம்.
     ஒரு திரைப்படம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் அருகிவரும் வேளையில் சில திரைப்படங்களே இப்பொழுது வெற்றி பெறுகின்றன. அதையும் தாண்டி அது விவாதத் தளத்திற்கு செல்வது என்பது மிகவும் அரிதே , சமீபத்தில் தேசிய விருது பெற்றது என்பதற்காக மட்டுமே ஒரு திரைப்படத்தினை தமிழ் திரைப்பட உலகின் மேதகுபடம் என அறிவுஜீவிகள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் , ஆனால் வணிகத்திரைப்படம் என்பதற்காக தனிஒருவனை வெறும் வணிகச்சூழல் அடிப்படையில் மட்டும் அணுகுவது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயம் என நான் கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படமும் சமக்காலத்தினை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் ஒரு ஆவணமே , அதனடிப்படையில் சமக்காலத்திய முக்கியமான அரசியல் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் வணிகச்சூழலில் வெளிவந்தாலும் அதை நாம் விவாதத்தில் உட்புகுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். படைப்பு என்பது எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்பதைத் தாண்டி எதை மையமாக வைத்துக் கொடுக்கப்படுகிறது என்பதே மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் தனி ஒருவன் தனித்த அடையாளம் பெறுகிறது.


Bremla

  1. ^ Cite error: The named reference undefined was invoked but never defined (see the help page).