User:Asokan muthusamy
Appearance
நீலப்படமும் காவிக் கும்பலும்
அசோகன் முத்துசாமி
கடந்த சில வருடங்கள் போல் அல்லாமல் இந்த வருடம் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்திருக்கின்றன. காவிக் குண்டர்கள் கைகளில் தாலியுடன் அலைவதும், பொது இடங்களில் ஜோடியாக இருக்கும் ஆண்-பெண்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதும் அது போன்ற எதுவும் நடந்த மாதிரி செய்திகள் இல்லை. (அப்போது சாதி பார்ப்பார்களா அல்லது பார்க்க மாட்டார்களா?). இத்தனைக்கும் சங்பரிவாரம் அப்படியேதான் இருக்கின்றது. அது ஒன்றும் அழிந்து போய்விடவில்லை. பின்னர் ஏன் காவிப் பொறுக்கிகள் வெளியில் தலை காட்டவில்லை என்பதற்கு இந்நேரம் வாசகர்களுக்குக் காரணம் புரிந்திருக்கும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கலாச்சார காவலர் வேடம் போடுவது என்று அவர்கள் பதுங்கியிருக்க வேண்டும். ஆம், முன் எப்போதையும் விட அவர்களது கள்ளத்தனம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அம்பலமாகிவிட்டது. கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் உண்மையில் எந்தக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பது கர்நாடக சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக பதிவாகிவிட்டது. லட்சுமண் சாவடி, சி.சி.பாடீல் மற்றும் ஜெ.கிருஷ்ணா பாலெமர் ஆகிய மூவரும் கர்நாடக மாநில பாஜக அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள். கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாநில சட்டமன்றத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலைமை பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த மூன்று அமைச்சர்களுக்கும் அதைவிட முக்கியமான வேலை சட்டமன்றத்திற்குள்ளேயே இருந்தது. மூவரும் தங்களது அதி நவீன செல்போன்களில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (கலாச்சார வளர்ச்சி இல்லாமல் அறிவியல் வளர்ச்சி மட்டும் ஏற்படுவதால் விளையும் தீமைகளில் இதுவும் ஒன்று. கேமரா போன்களை வைத்துக் கொண்டு ரவுடிகளும், பொறுக்கிகளும் செய்கின்ற அயோக்கியத்தனத்திற்கு அளவே இல்லை). பொது இடங்களில் திருமணமாகாத ஆண்-பெண் சேர்ந்து நடமாடக் கூடாது என்பவர்கள் பொது இடங்களின் பொது இடமான சட்டமன்றத்தில் படுக்கையறைக் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறார்கள். என்னவொரு தெனாவெட்டு! அது சரி, ஜனநாயகத்தையே மதிக்காதவர்கள் சட்டமன்றத்திற்குள் மட்டும் ஒழுக்கமாக நடந்து கொள்வார்களா என்ன? உண்மையில் இதில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது அதிர்ச்சியடைவதற்கோ எதுவும் இல்லை. ஏனெனில், சங்பரிவாரிகள் பாலியல் ஊழல்களில் ஈடுபடுவது இது ஒன்றும் புதிதல்ல. சஞ்சய் ஜோஷி என்பவர் ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர். வகுப்புவாதத் தத்துவங்களை சங்கின் ஊழியர்களுக்கும், ஏன் மேல் மட்டத் தலைவர்களுக்கு இல்லை என்றாலும், அடுத்த கட்ட தலைவர்களுக்கே கூட போதிப்பவர். பாஜக ஆர்எஸ்எஸ் தத்துவத்திலிருந்து ஒரு அங்குலம் கூட விலகிச் செல்லக் கூடாது என்பவர். திருமணம் செய்து கொள்ளாதவர்; அது மட்டுமல்ல, உண்மையிலேயே அவர் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூட நினைத்திருந்தனர். 2005ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் அவர் படுக்கையறையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. ஆர்எஸ்எஸ்சின் சார்பாக பாஜகவிற்குள் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் பதவி விலக வேண்டியதாயிற்று. கட்சிக்குள் இருந்த, இருக்கும் அவரது விரோதிகளே (நரேந்திர மோடி, உமாபாரதி போன்றவர்கள்) அந்த காட்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. உமாபாரதி கட்சியை விட்டு நீக்கப்பட்ட கோவிந்தாச்சார்யாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டங்களில் ஜோஷி அடிக்கடி குற்றம் சாட்டிக் கொண்டே இருந்ததால் அவர் பழி வாங்கிவிட்டார் என்றார்கள். காரணம் எதுவாயினும், பாஜக பரிவாரத்தை அன்று பீடித்த வீடியோ கண்டம் (வீடியோ காண்டம் என்றும் சொல்லலாம்) இன்று வரை விடவில்லை. எப்படியாயினும், ஆர்எஸ்எஸ் அவரைக் கைவிட்டு விடவில்லை. சிறிது காலம் கழித்து வேறு பொறுப்புகள் கொடுத்து கௌரவித்தது. மத்தியப் பிரதேசத்தில் பாபுலால் கௌர் என்பவர் பாஜக முதலமைச்சராக இருந்தார். உமாபாரதிக்குப் பின்னர், சிவராஜ் சிங் சௌகானுக்கு முன்னர் 2004 ஆகஸ்டிலிருந்து 2005 நவம்பர் வரை பதவியில் இருந்த அவர் மீது பாஜக தொண்டர் சலீம் கபீர் என்பவரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். கபீரே இந்தப் புகாரைப் பகிரங்கமாகக் கூறினார். ஏற்கனவே தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டு விட்டார் என்று கடுப்பில் இருந்த உமாபாரதி கோஷ்டி கௌருக்கு இடைவிடாமல் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது. போதாதற்கு இந்த அசிங்கம் வேறு. இது அவர் முதல்வர் பதவியை இழப்பதற்கு இட்டுச் சென்றது. ஆனால், அவரை ஒழுக்கத்தின் மொத்த குத்தகைதாரர்கள் ஒதுக்கி வைத்துவிடவில்லை. இன்றும் கூட அவர் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கிறது. அதன் அமைச்சர் மகிபால் என்பவர் ஏற்கனவே பன்வாரி தேவி என்கிற நர்ஸ் ஒருவரை பாலியல் வன்முறை செய்து கொன்றுவிட்டார் என்கிற குற்றச்சாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆனால், பாஜக எதிர்க்கட்சியாக இருப்பதால் அது அரசாங்கத்திற்கே ஆபத்து உண்டாக்கும் சிக்கலாக ஆகவில்லை. காரணம், பாஜகவினர் அதை விட பெரிய பெரிய தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும், ஒரு முன்னாள் எம்பியும் இதர 15 பேருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது கடந்த நவம்பர் மாதம் அம்பலமானது. வழக்கும் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு வருவோம். மூன்று அமைச்சர்கள் நீலப்படம் பார்த்து பதவியை இழந்த இந்த சம்வபத்திற்கு முன்பாகவே கடந்த வருடம் ஹாலப்பா என்கிற அமைச்சர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகியுள்ளார். அவர் வேறு ஒன்றும் செய்யவில்லை. சிமோகாவில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரின் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார், அவ்வளவுதான். போலிசிடம் சொன்னால் கொன்று விடுவேன், குழந்தைகளைக் கடத்தி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் சில உதாரணங்களும் இருக்கின்றன. சுருக்கம் கருதி அவற்றைத் தவிர்க்கிறோம். நீலப்படம் பார்த்த விவகாரம் பாஜகவின் அதன் பரிவாரத்தின் ஒழுக்க முகமூடியைக் கிழித்துவிட்டது என்று பலரும் சாடுகிறார்கள். அது ஒரு வகையில் சரிதான். ஆனால், சட்டசபையில் நீலப்படம் பார்க்காதிருந்திருந்தால் அவர்கள் முன்னர் செய்தது-காதலர்களை அடித்து விரட்டுவது, கட்டாயக் கல்யாணம் செய்து வைப்பது, சதி போற்றுவது போன்ற இன்னிதரவை- எல்லாம் சரி என்று ஆகிவிடுமா என்ன? பிரச்சனை அதில் இல்லை. அவர்களது அடிப்படையான சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கிறது. ஆணாதிக்க குணத்தில் இருக்கிறது. கலாச்சாரம் குறித்த அவர்களது வியாக்கியானங்களில் இருக்கிறது. காதலுக்கு எதிரான இந்துத்துவம் உள்ளிட்ட மதவாத, இனவாத, சாதிவாத பாசிச சக்திகளின் கலாச்சார ரவுடித்தனத்தை பிற்போக்கு எண்ணம் கொண்ட, பழைமையில் இன்னும் ஊறிப்போன, அதை விட்டுத் தொலைக்க மனமில்லாதவர்கள் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் அடிப்படை பெண்ணை ஏககாலத்தில் ஆணின் புனித அடிமையாகவும் போகப் பொருளாகவும் கருதும் ஆணாதிக்கக் கலாச்சாரத்தில் இருக்கிறது. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், அதே வேளையில் கட்டற்ற காம லீலைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக தனியாக பரத்தையர் குலத்தையும் உருவாக்கி வைத்துக் கொள்கிறது, ஆணாதிக்கம். உண்மையில் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஒரு தார மணமுறையைக் கொண்டு வந்ததில் பெண்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்பதை பாகோபென் என்கிற அறிஞர் கூறுவதை பிரெடிரிக் ஏங்கெல்ஸ் முற்றிலும் சரி என்று ஆமோதிக்கிறார். புராதன பாலுறவு முறை ஈனமானவை என்றும், ஒடுக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர்களே முதலில் கருதினர் என்று ஏங்கெல்ஸ் மேலும் கூறுகிறார். '(ஒரு தார மணமுறை எனும் முன்னேற்றம்) ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. இன்றைய நாள் வரையுங்கூட ஆண்கள் குழு மணத்தின் இன்பங்களைக் கைவிடக் கனாக் கண்டது கூட கிடையாது என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மணமுறை நோக்கி மாற்றம் கண்டபிறகுதான் கண்டிப்பான ஒரு தார மணத்தை-பெண்களுக்கு மட்டும்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை-ஆண்கள் புகுத்த முடிந்தது'. (பிரெடிரிக் ஏங்கெல்ஸ்; குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்; பக். 67). ஆம், ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கூடிய ஆர்எஸ்எஸ்சின் கலாச்சாரம் ஆணாதிக்கக் கலாச்சாரம்தான். அதன் துணை அமைப்புகளும் அப்படியே நடக்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பெண்களுக்கு 'ஒழுக்கத்தைப்' போதித்துக் கொண்டு மறுபக்கம் தாங்களே அதை மீறுவார்கள் என்பது நீலப்பட விவகாரத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது. அத்தகைய கலாச்சாரத்தையே அவர்கள் காப்பாற்ற விரும்புகிறார்கள். அந்த மூவரும் அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமே மேலிட உத்தரவுப்படி விலகியிருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் இன்னும் பாஜகவின் உறுப்பினர்கள்தான். வேறு அரசியல் காரணங்களுக்காவோ அல்லது உள்கட்சிப் பிரச்சனை காரணமாகவோ அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்; அல்லது வெளியேறலாம். ஆனால், இந்தக் குற்றத்திற்காக அவர்களை இந்துத்துவவாதிகள் கட்சியைவிட்டு வெளியேற்றப் போவதில்லை.
-----------------------------------------------------------------------------18.2.12